😯அமெரிக்க – ரஷ்ய உறவுகளில் ஏற்படப்போகும் மாற்றம்❗❗

இருதரப்பு உறவுகளில் பாரிய விரிசல் ஏற்பட்டுள்ள பின்னணியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டீனும் ஜெனீவாவில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.இந்த சந்திப்பை மேற்கொள்வதற்கு ஜோ பைடன் மேற்கொண்ட முயற்சிக்கு ரஷ்ய ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ள அதேவேளை இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திப்பது சிறந்தது என ஜோ பைடன் கூறியுள்ளார்.

ஆழமான கருத்துவேறுபாடுகள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கான எதிர்பார்ப்புக்கள் குறைவாக இருக்கும் சூழலில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டீனும் முக்கிய சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக ரஷ்ய ஜனாதிபதியை ஜெனீவாவில் வைத்து ஜோ பைடன் சந்தித்துள்ளார்.ஆயுதக்கட்டுப்பாடு, பைசர் தாக்குதல், தேர்தல் தலையீடு மற்றும் யுக்ரைய்ன் என அனைத்து விடயங்களிலும் முரண்பட்டிருந்தாலும் தமக்கு இடையிலான இந்தப் பேச்சுக்கள் மேலும் ஸ்தீரமான மற்றும் கணிக்கக் கூடிய உறவுகளுக்கு வழிகோலும் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தை நடத்தும் இடத்திற்கு செல்வதற்கு முன்னர் இரண்டு நாடுகளினதும் தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் கைலாகுகொடுத்திருந்தனர்.இதனையடுத்து ஜோ பைடனுக்கு அருகில் அமர்ந்த விளாடிமீர் புட்டீன், அமெரிக்க – ரஷ்ய உறவுகளுக்கு இடையில் பல சிக்கல்கள் காணப்படுவதாகவும் அது குறித்து கலந்துரையாடுவதற்கு உயர்மட்ட சந்திப்பு அவசியம் எனவும் கூறியுள்ளார்.இதற்கு பதில் அளித்த ஜோ பைடன், ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து தீர்மானிக்க முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் இரண்டு நாடுகளினதும் ஜனாதிபதிகளுக்கு நெருக்கமான அதிகாரிகள், இந்த மாநாட்டு குறித்து நம்பிக்கையீனத்தையே வெளியிட்டிருந்தனர்.நான்கு தொடக்கம் ஐந்து மணித்தியாலம் வரை நீடிக்கும் இந்தப் பேச்சுக்களில் முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்படும் என நம்பவில்லை என அமெரிக்காவின் மூத்த அதிகாரி கூறியுள்ளார்.