⚫அகதிகளை அனுமதிக்கும் எண்ணிக்கையை குறைத்த அவுஸ்திரேலியா!

அகதிகளை அனுமதிக்கும் எண்ணிக்கையை குறைத்த ஆஸ்திரேலியா: போராட்டத்தில் ஈடுபட்ட ஆப்கான் அகதிகள்

மனிதாபிமான அடிப்படையில் அகதிகளை அனுமதிக்கும் எண்ணிக்கையை ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் குறைத்துள்ள நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து இந்தோனேசியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்கான் அகதிகள் போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் கொரோனா முடக்கநிலை நடைமுறையில் உள்ள நிலையில் இப்போராட்டம் நடைப்பெற்றிருக்கிறது.

இந்தோனேசியாவில் சுமார் 14 ஆயிரம் பதிவுச்செய்யப்பட்ட அகதிகள் இருக்கின்றனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆப்கானிஸ்தானில் தாலிபானால் தாக்குதலுக்கு உள்ளாகும் ஹசாரா இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பலர் ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக தஞ்சமடைய இந்தோனேசியா வந்தவர்கள் எனப்படுகின்றது.

தங்களை ஆஸ்திரேலியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே தற்போது போராட்டம் நடத்திய ஆப்கான் அகதிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.