⚫அகதிகளுக்கு இடமளிக்கும் ஆஸ்திரேலியா! வெளியான முக்கிய அறிவிப்பு!

மனிதாபிமான விசா திட்டத்தின் கீழ் ஆப்கான் அகதிகளுக்கு இடமளிக்கும் ஆஸ்திரேலியா

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தாலிபான் அமைப்பு கைப்பற்றுள்ள நிலையில், உயிருக்கு அஞ்சி ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறும் காட்சிகள் உலகத்தை பதைப்பதைக்க வைத்திருக்கிறது.

இந்த நிலையில், அவ்வாறு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுபவர்களுக்கு தங்களது மனிதாபிமான விசா திட்டத்தின் கீழ் 3,000 இடங்களை ஆஸ்திரேலிய அரசு ஒதுக்கியிருக்கிறது.

ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் குடும்பத்தினர் வசிக்கும் பட்சத்தில் அவ்வாறான ஆப்கானியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹசாரா போன்ற சிறுபான்மை மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், இந்த 3,000 இடங்கள் என்பது சிறப்புத் திட்டம் இல்லை என்றும் ஏற்கனவே இந்த ஆண்டு ஆஸ்திரேலிய அரசு அகதிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ள சுமார் 13 ஆயிரம் இடங்களிலேயே இந்த எண்ணிக்கை உள்ளடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.