⚫😳டெல்டா கொரோனா பீதியில் ஆஸ்திரேலியா ஆய்வாளர்கள்! 120ஆண்டுகளில் இதுதான் கொடூரமான சுகாதார நெருக்கடி!

சிட்னி: ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் டெல்டா கொரோனாவால் வைரஸ் பாதிப்பு உச்சத்தில் உள்ள நிலையில், கடந்த 120 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான சுகாதார நெருக்கடி இதுதான் என அந்நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். உலகெங்கும் எந்த நாட்டிலும் இதுவரை கொரோனா வைரஸ் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. சில மாதங்கள் கொரோனா குறைந்ததைப் போலத் தோன்றினாலும், அடுத்த அலையில் மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆஸ்திரேலியாவும் இப்போது அந்த பிரச்சினையைத் தான் எதிர்கொண்டுள்ளது. டெல்டா கொரோனாவால் அங்குத் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


⚫கொரோனா பாதிப்பு
இன்று அங்கு 112 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இரண்டு நாளில் மட்டும் 45% வரை அங்கு வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால், அங்குள்ள சிட்னி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்றும் வீடுகளிலிருந்தால் வைரஸ் பாதிப்பு ஏற்படாது என்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாண தலைவர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் தெரிவித்துள்ளார்.


⚫ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவிலேயே மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான சிட்னியில் கடந்த ஜூன் 26ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வருவோர் மூலம் கொரோனா பரவல் ஏற்படுவதைத் தடுக்க ஆஸ்திரேலியா கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தனிமைப்படுத்தும் விடுதிகளிலிருந்து 20க்கும் மேற்பட்ட இடங்களில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளனர்.


⚫டெல்டா கொரோனா
டெல்டா கொரோனா பரவலே வைரஸ் பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. அதேபோல வேக்சின் பணிகளும் அங்கு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. உலகின் மற்ற முன்னணி நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி போடும் பணிகள் மிகவும் மெதுவாகவே நடைபெற்று வருகிறது.


⚫120 ஆண்டுகளில் முதல்முறை
இந்நிலையில், இது குறித்து அந்நாட்டின் தொற்றுநோய் வல்லுநர் பில் போவல் கூறுகையில், ‘சிட்னியில் இப்போது மிக மோசமான பிரச்சினை நிலவுகிறது. இது தான் கடந்த 120 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான சுகாதார நெருக்கடி, நிலைமையைக் கட்டுப்படுத்த ஊரடங்கை இன்னும் கடுமையாக்க வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலமே வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியும்’ என்று அவர் கூறினார்.


⚫வேக்சின் பணிகள்
வேக்சின் போடும் பணிகளைச் சரிவர மேற்கொள்ளவில்லை என்றால் என்ன மாதிரியான ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு ஆஸ்திரேலியா ஒரு மிகச் சிறந்த உதாரணம். தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் மூலம் வைரஸ் பாதிப்பு, அங்குக் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், வேக்சின் பணிகளில் அந்நாட்டு அரசு தீவிர முனைப்புக் காட்டத் தவறியதால், டெல்டா கொரோனா இப்போது மோசமான பாதிப்புகளை அங்கு ஏற்படுத்தியுள்ளது.