⚫அவுஸ்திரேலியா பிரதமர் மக்களுக்கு கூறியுள்ள முக்கிய கருத்து!

கொவிட் 19 உடன் வாழ்வதற்கு பழகிக்கொள்ள வேண்டும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸன் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகள் வெற்றிகரமாக இடம்பெற்றாலும் சில மாநிலங்களில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். டெல்டா திரிபு பரவல் காரணமாக நீண்ட முடக்கத்தில் அவுஸ்திரேலியர்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் பலருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமையினால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வழமை நிலைக்கு நாடு செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார். தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 70 – 80 வீதமாக அமையும் போது இந்த முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்றும் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கடுமையாக பாதிக்கப்பட்ட 12 கவுன்சில்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஏனைய பகுதிகளில் உடற்பயிற்சி தவிர ஏனைய நேரங்களில் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்களன்று நியூ சவுத்வேல்ஸில் 818 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். நேற்றைய தினம் இந்த எண்ணிக்கை 830 ஆக காணப்பட்டது.

இந்த நிலையில் செப்டெமபர் 2 ஆம் திகதியுடன் முடக்கத்திலிருந்து விடுபட முடியும் என விக்டோரியா முதல்வர் குறிப்பிட்டுள்ளார். ஏனைய அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளையும் விட அவுஸ்திரேலியா தொற்று பரவலை சிறப்பாக கையாள்கின்றது. இதேவேளை அவுஸ்திரேலியாவில் மொத்தமாக 44600 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 984 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.