🔘😳தலிபான்கள் தொடர்பில் பரபரப்பை ஏற்படுத்திய கனடிய பிரதமர் அறிவிப்பு!

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் பிடியில் சிக்கியுள்ள நிலையில் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் உலக நாடுகளின் தலைவர்கள் ஆப்கான் நிலவரம் குறித்து உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். இது ஒரு நாட்டின் பிரச்சனை என்ற அளவில் இல்லாமல் உலக நாடுகளின் பாதுகாப்பிற்கும் அதில் பங்கு இருப்பதால் அடுத்து என்ன முடிவு எடுக்கப்படும் என்பது குறித்த தீவிரமான விவாதமும் ஒருபுறம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தாலிபான்கள் குழு தீவிரவாத குழு என்பதில் ஐயமில்லை என்றும் , அவர்கள் மீது தடை விதிப்பது குறித்துப் பரிசீலிக்கலாம் எனவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று ஆப்கான் நிலவரம் குறித்து ஜி7 நாடுகளின் தலைவர்கள் காணொலி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau), பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson), ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜெலா மெர்கல் (Angela Merkel), இத்தாலி பிரதமர், ஜப்பான் பிரதமர் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden)உள்ளிட்டோர் ஆப்கான் நிலவரம் குறித்து ஆலோசித்தனர். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ட்ரூடோ (Justin Trudeau) , கனடா எப்போதோ தாலிபான்களைத் தீவிரவாதிகளை அறிவித்துவிட்டது. அவர்கள் தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றனர். அதனால் அவர்கள் மீது பல்வேறு தடைகளை விதிப்பது குறித்து நிச்சயமாகப் பரிசீலிக்கலாம் என்று கூறினார்.

இதற்கிடையே ஜி7 மாநாட்டில் ஆப்கானிஸ்தானில் வெளியேறும் நாளை ஆகஸ்ட் 31ஐ தாண்டி நீட்டிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், ஆகஸ்ட் 31ஐ தாண்டி மேற்கத்தியப் படைகள் காபூலில் இருக்கலாம் என்று நினைத்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என தலிபான்கள் எச்சரித்துள்ளனர். இதேவேளை தலிபான்கள் ஆட்சி அமைப்பதில் தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாகச் சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ள நிலையில், கனடா பிரதமரின் இந்த அறிவிப்பு சர்வதேச அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.