விநோத அதிகாரத்தை டிரம்ப் பிரயோகிக்க முயற்சி! சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது அதிபர் பதவிக்காலத்தின் இறுதி நாட்களில் செய்த தவறுகளுக்காக தனக்குத் தானே மன்னிப்பு வழங்கிக் கொள்ளும் விசித்திர வீட்டோ-பவரைப் பயன்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுய மன்னிப்பு வழங்கிக் கொள்ளுதல் என்பது இதுவரை எந்த அதிபரும் இதற்கு முன்பாகச் செய்ததில்லை என்று அங்கு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

அதிபர் நாற்காலியை விட்டு விலகி ஜோ பைடனுக்கு வழிவிடும் முன்பாக தான் செய்த தவறுகளுக்கு தானே மன்னிப்பு வழங்க சட்ட வல்லுநர்களை கலந்தாலோசித்து வருகிறார் ரம். நாடாளுமன்ற கேப்பிடல் கட்டிடத்தில் தன் ஆதரவாளர்களைத் தூண்டி விட்டு கலவரத்தில் ஈடுபடச் செய்ததையடுத்து அவர் மீது சட்ட நடவடிக்கைகள் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தனக்குத் தானே சுய-மன்னிப்பை அவர் வழங்கிக் கொண்டால் அது எப்போது என்பதும் சட்டம் இதனை ஏற்குமா என்பதும் தற்போது அங்கு பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. டிரம்ப் சுய-மன்னிப்பு பற்றி முதலில் தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்தான் செய்தி வெளியிட்டது. தன்னைத்தானே மன்னிப்பதற்கு அவருக்கு அதிகாரம் உள்ளதாக டிரம்ப் நம்புகிறார். 2018-ல் தனக்கு அதற்கான முழு உரிமை இருப்பதாக அவர் ட்விட் செய்ததும் நினைவுகூரத்தக்கது.

இந்நிலையில் சுய மன்னிப்பு பற்றி அமெரிக்கச் சட்டம் கூறுவதென்ன?இது குறித்த அமெரிக்க சட்டங்களில் முரண்கள் இருக்கிறது என்று கூறும் சட்ட வல்லுநர்கள், எப்படியிருந்தாலும் ஒருவரும் தன்னைத்தானே மன்னித்துக் கொள்ள முடியாது. யாரும் தன் மீதான வழக்கில் தானே தீர்ப்பு வழங்கிக் கொள்ள முடியாது.

மற்றும் சில வல்லுநர்கள் மன்னிப்பு என்பதே ஒருவர் மற்றவருக்கு அளிப்பதுதான். தனக்குத் தானே மன்னிப்பு வழங்க முடியாது என்கின்றனர். எந்த அதிபரும் இதுவரை செய்யத் துணிந்ததில்லை என்கின்றனர் சில சட்ட நிபுணர்கள்.

ஆனால் சட்டத்தில் இடமிருக்கிறது என்று டிரம்ப் இருக்கும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறிக்கொள்கின்றனர்.