⚫🇫🇷பிரான்ஸ் அரசிற்கு எதிராக குவியும் வழக்குகள்! புதிய சிக்கல்!

பிரான்சின் இரண்டாவது நீதியரசரும், சட்டமா அதிபருமான பிரோன்சுவா மொலன் (Procureur général François Molins) அவர்களிற்கு தலைவலியும் அதிகமான வேலையும் ஏற்பட்டுள்ளது. கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகளில் முறையான துரித நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனவும், இதன் மூலம் நடந்த சாவுகளிற்கான வேண்டுமென்றே செய்யாத கொலைக்குற்றத்தின் பேரிலும், பல அமைச்சர்கள் மீதும், எமானுவல் மக்ரோன் மீதும் ஆயிரக்கணக்கான வழக்குகள், வழக்காடு மன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் பல்லாயிரக் கணக்கில் போடப்பட்டுள்ளன. இதற்கு தொடர்பாடல் உலகின் நவீனத்துவமும், இணையத் தொடர்பின் வளர்ச்சியுமே காரணம். இதனாலேயே மிக விரைவாக வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இது பிரெஞ்சுக் குடியரசின் நீதித்துறையை திக்குமுக்காட வைத்துள்ளது. இதில் எத்தனை வழக்குகள் ஏற்றுக்கொள்ளப்படும், எத்தனை வழக்குகள் விசாரணைக்குத் தகுந்தவை என்பதை நீதியரசர்களே திர்மானிப்பார்கள். நீதித்துறையில் பல எதிர் அரசியல் ஊடுருவல்கள் நடந்துள்ளன. அவை அரசியல் செயற்பாட்டின் பின்னணி கொண்டதாயினும், அமைச்சர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை விசாரிக்க வேண்டியது குடியரசின் நீதிமன்றங்களின் கடமையாகும்.

என சட்டமா அதிபர் பிரோன்சுவா மொலன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே முன்னாள் பிரதமர் எதுவார் பிலிப், பிரான்சின் சுகாதாரம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அமைச்சர் ஒலிவியே வெரோன், மற்றும், குறிப்பிட்ட அரசியற்துறை சார்ந்தவர்கள் எனப் பலர் விசாரிக்கப்பட்டுள்ளனர். இது ஜனாதிபதி வரை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகளும் பிரான்சின் நீதித்துறையில் உள்ளன.