⚫🇫🇷பிரான்ஸின் இன்றைய கொரோனா நிலவரம்! மீண்டும் அதிகரிக்கும் தொற்றுக்கள்!

பிரான்சில் நாளிற்கு நாள் அதிர்ச்சிக்குரிய விதமாக அதிகரித்து 100.000 பேரிற்கு 309,75 பேர் என்ற விகிதத்தில் கொரோனாத் தொற்று விகிதம் (Taux d’incidence) உச்சமடைந்துள்ளது. இந்த விகிதம் 200 இனைத் தாண்டினாலே, அது கடுமையான எச்சரிக்கை நிலை என்பது குறிப்பிடத்தக்கது. இல்-து-பிரான்சில் மட்டும் இது 550 இனைத் தாண்டி உள்ளமை ஆபத்தின் பேரச்சமாக உள்ளது. செய்ன்-சன்-துனியில் இது 7000 இனை எட்டி உள்ளது.

வைத்தியசாலைகள் அனைத்தும் பெரும் அழுத்தத்தில் உள்ளன. நவம்பர் மாதம் பிரான்சினைக் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தாக்கியபோது இருந்ததை விட, வைத்தியசாலைகளில் கொரேனாத் தொற்று நோயாளிகள் அதிகரித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 14.678 பேரிற்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பிரான்சில் தொற்றிற்குள்ளானவர்களின் தொகை 4.313.073 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாத் தடுப்பூசியில் கவனம் செலுத்தும் அரசாங்கம், கொரோனப் பரிசோதனையில் அக்கறை காட்டாமையினால் தொற்று எண்ணிக்கைள் குறைவாகக் காட்டப்படுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில், 287 பேர் சாவடைந்துள்ளனர். இதனால் பிரான்சில் கொரோனாவால் சாவடைந்தவர்கள் தொகை 92.908 ஆக உயர்ந்துள்ளது.

வைத்திசாலைகளில் மட்டும் 67.503 பேர் சாவடைந்துள்ளனர். 26.488 நோயாளிகள் கொரேனாத் தொற்றின் தீவிரத்தினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளாந்தம் தொடர்ச்சியாக அதிகரித்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிராபத்தான நிலையில் 4.634 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனத் தொற்றுப் பரிசோதனை மற்றும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களிற்கான எண்ணிக்கையின் வீதமானது 7,92 % ஆக உயரந்துள்ளது.