🔴🇫🇷பிரான்ஸில் இணையத்தில் கஞ்சா விற்பனை!

தண்டப்பணம் செலுத்த பணம் இல்லாததால், கஞ்சா விற்பனையில் இறங்கிய மூன்று நண்பர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இச்சம்பவம் பரிசில் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை பரிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் மூவர் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிறுவன். மூவரும் பால்யகால நண்பர்கள். அவர்கள் மூவரும் இவ்வார ஆரம்பத்தில், பரிசில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருந்த போது BAC காவல்துறையினர் அவர்களை சாரணமாக சோதனையிட்டனர். ஆனால் அவர்களது மகிழுந்துக்குள் இருந்து கஞ்சாவின் நெடி பலமாக வந்ததை அடுத்து, அவர்கள் சோதனையிடப்பட்டனர். அப்போது மகிழுந்துக்குள் இருந்து 147 கிராம் எடையுள்ள கஞ்சா களியும், 35 கிராம் எடையுள்ள உலர்ந்த கஞ்சாவும் மீட்க்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு, வியாழக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். பின்னர் நீதிமன்றத்தில், அவர்களை விசாரித்தபோது, ‘உள்ளிருப்பு தடையை மீறி பயணித்ததால் காவல்துறையினர் தண்டப்பணம் அறவிட்டதாகவும், அதை செலுத்த தங்களிடம் பணம் இல்லாததால், இந்த கஞ்சா விற்பனையில் இறங்கியதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.

கஞ்சா விற்பனை செய்வது இதுவே முதன்முறை எனவும், திறம்பட செய்யத்தெரியவில்லை எனவும், snap chat சமூக வலைத்தளமூடாக தங்களது வாடிக்கையாளர்களை பிடித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். பின்னர் அவர்களில் இருவருக்கு, 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.