🇫🇷👮‍♂️பிரான்ஸில் அதிகரிக்கப்பட்ட ஊரடங்கு வீதிச் சோதனைகள்!

சனிக்கிழமையில் இருந்து, 30 சதவீதமாக ஊரடங்கு மீறல் கட்டுப்பாட்டு வீதிச் சோதனைகள் (contrôles) அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மனமன் அறிவித்துள்ளார். 18h00 மணி ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இது வரை 600.000 வீதிச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

சனிக்கிழமை மட்டும் 65.000 சோதனைகள் நடாத்தப்பட்டுள்ளதாக A13 நெடுஞ்சாலையிலுள்ள Buchelay (Yvelines)கட்டணச் சாவடிக்கு (péage) வந்திருந்த உள்துறை அமைச்சர் ஊடகங்களிற்குத் தெரிவித்துள்ளார். ஊரடங்குக் கட்டுப்பாட்டு மீறல்கள் மிகக் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு குற்றப்பணம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை மட்டும் 6.000 குற்றப்பணங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

சுகாதாரக் கட்டப்பாடு மற்றும் ஊரடங்கை மீறியதற்காக சனிக்கிழமை மட்டும் 400 வர்த்தக நிலையங்களிற்கு குற்றப்பணமும் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது எனவும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தக் கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் மிகக் கடுமையாகத் தொடரும் எனவும் உள்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.