🇫🇷பிரான்ஸில் உடல் கருகி ஒருவர் பலி!

செவ்ரோன் நகரில் இடம்பெற்ற தீ விபத்து ஒன்றில் ஒருவர் சாவடைந்துள்ளார். இத்தீவிபத்து இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. செவ்ரோனின் நகரமண்டபத்துக்கு அருகே உள்ள ஐந்து அடுக்கு கட்டிடம் ஒன்றில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

காலை 6 மணிக்கு தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், தீயை அணைக்க போராடினர். குறித்த கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் தீ பரவி, மேல் தளங்களை நோக்கி எரிய ஆரம்பித்துள்ளது. இச்சம்பவத்தில் முற்றாக எரிந்த நிலையில் ஒருவரின் சடலம் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் ஆணா அல்லது பெண்ணா என்பது கண்டுபிடிக்க முடியவில்லை. 30 தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர். தீ விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.