⚫🔥கொதிக்கும் பூமி! மனித குலத்திற்கு ஊதப்பட்டது அபாய சங்கு!

இந்த ஆண்டு ஜூலை மாதம் தான் இதுவரை உலகம் பதிவு செய்த மிக வெப்பமான மாதம் என அமெரிக்க மத்திய அறிவியல் மற்றும் ஒழுங்குமுறை முகமை கூறியுள்ளது. தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு (NOAA) வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.


நிலம் மற்றும் கடல் பரப்பின் ஒருங்கிணைந்த வெப்பநிலை, கடந்த 20ஆம் நூற்றாண்டின் சராசரி வெப்ப நிலையான 15.8 டிகிரி செல்சியஸை விட 0.93 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருந்ததாக தரவுகள் கூறுகின்றன. 142 ஆண்டுகளாகத் தான் உலகில் வெப்பநிலை விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. எனவே தட்ப வெப்பநிலைகளை பதிவு செய்யத் தொடங்கிய காலம் முதல் 2021 ஜூலை தான் வரலாறு காணாத அதிகபட்ச வெப்ப நிலை. இது பருவநிலை மாற்றத்தின் நீண்ட கால தாக்கம் என நிபுணர்கள் கருதுகிறார்கள். இந்த விரும்பத்தகாத ஜூலை மாத வெப்பநிலை நாம் கவலைப்பட வேண்டிய ஒன்று என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2021 ஜூலை தான் ஆசிய கண்டத்தின் மிக வெப்பமான மாதமாகவும், ஐரோப்பிய கண்டத்துக்கு இரண்டாவது அதிகபட்ச வெப்பம் பதிவான மாதமாகவும் இருக்கிறது.

அறிக்கையில் கூறப்பட்டிருப்பது மனித இனத்துக்கான அபாய சங்கு என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் ஆன்டோனியோ குட்டரஸ் கூறினார்
நாம் இப்போது ஒருங்கிணைந்து செயல்பட்டால், பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் அழிவை தவிர்க்கலாம். நாம் தாமதப்படுத்தவோ, குறைகூறிக் கொண்டிருப்பதற்கோ நேரமில்லை என்பதை இன்றைய அறிக்கை தெளிவாகக் குறிப்பிடுகிறது என கூறினார். கடந்த 2,000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த 50 ஆண்டுகளில் (1970-களிலிருந்து) பூமியின் நிலப் பரப்பு வெப்பநிலை அதிவேகமாக உயர்ந்திருக்கிறது என அவ்வறிக்கையை எழுதியவர்கள் கூறுகிறார்கள்.