⚫🇱🇰இலங்கை விடயம் தொடர்பாக பிளிங்கென் முதல் அறிக்கை!

இலங்கை விடயம் தொடர்பாக
பிளிங்கென் முதல் அறிக்கை

சிறிலங்கா உட்பட உலகெங்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விவகாரங்களில் ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை எடுக்கின்ற ஆதரவுத் தீர்மானங்களை அமெரிக்கா ஊக்குவிக்கும் என்று அந்நாட்டின் புதிய ராஜாங்கச் செயலாளர் அன்ரொனி பிளிங்கென் (Antony Blinken) தெரிவித்தி ருக்கிறார்.

அமெரிக்கா அதன் வெளியுறவுக் கொள்கையில் மனித உரிமைகளுக்கு மைய ஸ்தானத்தை வழங்கி உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ. நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் 46 ஆவது அமர்வில் அவர் இன்று வீடியோ வழியாகத் தோன்றி அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றினார்.

சிரியாவிலும் வடகொரியாவிலும் இடம்பெற்றுவருகின்ற மனித உரிமை மீறல்கள், சிறிலங்காவில் கடந்த காலத் தில் இடம்பெற்ற அநீதிகளுக்குப் பொறுப்புக் கூறாமை மற்றும் தென் சூடான் நிலைவரம் ஆகிய விவகாரங்கள் உட்பட உலகளாவிய மனித உரிமை மீறல் விடயங்கள் தொடர்பாக ஐ. நா. அமர்வு எடுக்கின்ற சகல தீர்மானங்களையும் அமெரிக்கா ஆதரித்து ஊக்குவிக்கும் – என்று அப்போது அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் ஜோ பைடன் நிர்வாகம் கடந்த மாதம் பதவியேற்ற பின்னர் சிறிலங்கா விவகாரம் தொடர்பாக வெளியிடப்படுகின்ற முதலாவது முக்கியமான கருத்து இது என்று குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை – மனித உரிமைகள் சபையில் மீண்டும் உறுப்பு நாடாக இணைந்து கொள்வதில் அமெரிக்கா வுக்கு உள்ள விருப்பத்தை வெளியிட்ட பிளிங்கென், அதற்கான ஆதரவை வழங்குமாறு உறுப்பு நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் உறுப்பு நாடாக இருந்து வந்த அமெரிக்காவை முன்னாள் அதிபர் ட்ரம்ப் கடந்த 2018 இல் உறுப்புரிமையிலிருந்து வெளியேற்றியிருந்தார்.