🔴🇱🇰ஜனாதிபதி கோட்டாபாய பிறப்பித்துள்ள உடனடி உத்தரவு!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலில் அனர்த்தத்திற்கு உள்ளான கப்பலை, ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்வது தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் (09) ஆம் திகதி அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 19ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு அருகே கப்பல் வந்தது முதல் நடந்த அனைத்து விவரங்களையும் துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன விபரித்தார்.
அனர்த்தத்திற்குள்ளான கப்பல் மூழ்கும் அபாயம் இருப்பதாக கடல் சார் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

அப்படி நிகழ்ந்தால், கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய சேதத்தை குறைக்க கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டு செல்வது மிகவும் பொருத்தமான நடவடிக்கை என்பது அவர்களின் முன்மொழிவாக இருந்தது.
அதன்படி, தொழில்நுட்ப அம்சங்களின் அடிப்படையில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டு செல்ல உடனடியாக உத்தரவு பிறப்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
இந்த விடயத்தில் எடுக்கப்படும் தீர்மானம், தொழில்நுட்ப விடயங்களின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் அரசியல் விடயங்களை அதனுடன் சம்பந்தப்படுத்தக்கூடாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.