⚫😳இலங்கையில் சடலமாக பிரேத அறைக்கு அனுப்பப்பட்ட நபர் உயிர்பெற்று எழுந்த அதிசயம்!

உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட ஒருவர் பிரேத அறையில் திடீரென உயிர்தெழுந்த சம்பவம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 40 வயதான குறித்த நபர் திடீர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக அறிவித்த நிலையில் சடலம் பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து உயிரிழந்தவரின் உறவினர் ஒருவர் பிரேத அறைக்கு சென்றிருந்தபோது இறந்தவரின் உடலில் அசைவுகளை அவதானித்து அதிர்ந்து போயுள்ளார்.

குறித்த விடயம் மருத்துவர்களுக்கு கூறப்பட்ட நிலையில் மீளவும் விடுதிக்கு எடுத்து பரிசோதித்தபோது குறித்த நபர் உயிருடன் இருப்பது உறுதியாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.