🙄புலி இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்! நடிகர் விஜய் சேதுபதியால் சர்ச்சை!

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் துக்ளக் தர்பார் படத்தின் டீசர் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் ‘நானும் ரவுடிதான்’ படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி, பார்த்திபன் கூட்டணி இணைந்துள்ளது. இவர்களுடன் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அத்தோடு முழுக்க அரசியல் பின்னணி கொண்ட களமாக இத்திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா மற்றும் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தை ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளரும், ‘கோப்ரா’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சீயான் 60’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வரும் லலித் குமார் தயாரித்து வருகிறார். மேலும் கடந்த ஜூலை மாதத்தில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது டீசர் வெளியிடப்பட்டுள்ளது. டீசரில் பார்த்திபனுக்கு ராசிமான் என பெயரிடப்பட்டிருப்பதும் அவரது கட்சி சார்பாக ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரில் தெரிய வருகிறது. அவரது கட்சிக்கு சிவப்பு மஞ்சள் சிவப்பு என நாம் தமிழர் கட்சியின் பிரதான வண்ணமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

மேலும் போஸ்டரில் ‘புலி இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்’ என்றும் எழுதப்பட்டிருக்கிறது. டீசரின் இறுதிக்காட்சியில் “எப்டினாலும் நீங்க என்னை சும்மா விடப்போறதில்ல. அதனால நானும் உங்கள சும்மா விடுறதா இல்ல. வாங்களேன். நேரடியாவே மோதிப் பாப்போம்” என்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன. முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப்படமான ‘800’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று சீமான் தீவிரமாக குரல் கொடுத்ததால் அவரை எதிர்க்கும் வேலையில் விஜய் சேதுபதி இறங்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் பேச்சு எழுந்துள்ளன.