சீறும் டி. ராஜேந்தர்;விஜய்க்காக சிம்பு படத்தை முடக்குவதா?

நடிகர் சிலம்பரசன் நடிக்கும் “ஈஸ்வரன்” திரைப்படம் 14ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த படம் ஓடிடியில் அதே நாளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று கூறி ஈஸ்வரன் படத்தை திரையரங்கில் வெளியிட மாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் திங்கட்கிழமை முடிவு செய்தனர்.

இதையடுத்து ஓடிடியில் படத்தை வெளியிடும் முடிவை தயாரிப்பாளர்கள் கைவிட்டனர்.
அதேசமயம் சிலம்பரசன் நடிப்பில் உருவான “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு சிலம்பரசன் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று கூறி தயாரிப்பாளர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக டி.ராஜேந்தர் குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் செய்தியாளர்களிடம் டி. ராஜேந்தர் செவ்வாய்க்கிழமை கண்ணீர் மல்க பேசினார்.அப்போது, டிஜிட்டல் தளங்களில் படத்தை வெளியிட வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளதாக குறிப்பிட்டார்.

தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் நஷ்டத்திற்கு நடிகர்கள் என்றுமே பொறுப்பு ஏற்க மாட்டார்கள் என்று கூறிய அவர், மாஸ்டர் படத்துக்கு முன் ஈஸ்வரன் படம் வெளியாகி விடக் கூடாது என்பதாலேயே பலர் கூட்டு சேர்ந்து சதி செய்வதாக தெரிவித்தார்.

நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தாலும் எனது பிள்ளைக்காக உங்கள் முன்பு தோன்றி பேசுகிறேன் என்று அவர் கூறினார்.தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தேனாண்டாள் முரளியை எதிர்த்து போட்டியிட்டதன் காரணமாகவும், நடிகர் விஷாலை எதிர்த்து சிலம்பரசன் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டதன் காரணமாகவும், சிம்பு படத்தை முடக்க சதி நடப்பதாக டி.ராஜேந்தர் குற்றம்சாட்டினார்.

வேறு யாரையோ வாழ வைப்பதற்காக கழுத்தறுப்பு வேலைகளில் திரைத்துறையில் பலர் ஈடுபட்டுள்ளனர். நான் பெத்த மகனின் படம் வெளிவந்தே தீரும் என்று டி. ராஜேந்தர் தெரிவித்தார்.
சிவாஜி நடிப்பில் உருவான, ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாய் பாடலையும் சிம்புவிற்காக டி.ராஜேந்தர் பாடிக் காட்டினார்.

முன்னதாக, ஈஸ்வரன் படம் ஓடிடி தளத்தில் வெளிவருவது தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் ஆடியோ வெளியிட்டிருந்தார். அதில், ‘ஒரே நாளில் திரையரங்கம் மற்றும் ஒடிடி தளத்தில் படம் வெளியாவதை அனுமதித்தால் அனைத்து திரைப்பட நிறுவனங்களும் இதே போல முடிவெடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

எனவே ஈஸ்வரன் படத்தை திரையரங்குகளில் வெளியிட முடியாது’ என்று கூறியுள்ளார்.
இந்த எதிர்ப்பை அடுத்தே ஈஸ்வரன் படத்தை ஓடிடியில் வெளியிடும் முடிவை படக்குழு கைவிட்டுள்ளது. ஈஸ்வரன் பட காட்சிகளின் எண்ணிக்கையை திரையரங்குகள் அதிகரிக்கும் என நம்புவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.